கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்கள்,பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி இன்று (ஆக.20) எடுத்துக்கொண்டனர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உயரிய கொள்கையான அனைத்து மதங்களுக்கும் சம உரிமை என்ற தன்மையை பல்வேறு இன, வகுப்பு, கலாசார, மதங்களின் சங்கமமான இந்திய திருநாட்டில் நிலை நாட்டுவதைக் குறிக்கும் வகையில் இந்த நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில் ”நான் சாதி, இனம், எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும் வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு நல்லிணக்குத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்"என உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்றவாறு நாம் பணியாற்றி சாதி, இன, மத வேறுபாடுகளின்றி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.பரிமளம் உட்பட அரசு அலுவலர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.