சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில், தனியார் சுயநிதி கல்லூரியை விட பல மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து, அங்கு பயிலும் 1,200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 47 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததை அடுத்து, விடுதியில் உணவு, குடிநீர், மின்சாரத் துண்டிப்பு போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இவை அத்தனைக்கும் ஈடு கொடுத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, முதுகலை பயிலும் மருத்துவ மாணவர்கள் போராட்டக் களத்திலேயே, அவர்களுக்கு தேவையான வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஒருபுறம் போராட்டம், மறுபுறம் வகுப்பு என ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாணவ மாணவிகள் இணைந்து செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத பல்கலைக்கழக நிர்வாகம், தற்போது போராட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குகள் தொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.