கடலூர்:சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம், ஆனால், கரோனா தொற்று காலத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொது மக்கள் கனகசபை மேடையில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு பொது நல இயக்கங்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மேடையில் ஏற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
ஆனால், சிவாச்சாரியார்கள் கனகசபை மேடையில் ஏறுவதற்கு அனுமதி வழங்க முடியாது என சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் மாலை 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு பொது நல இயக்கங்கள் ஆலயத்தின் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.