கடலூர்: செம்மண்டலம் பகுதியில் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி அமைந்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வரும் நிலையில், இதில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் வகுப்புகள் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும் மாலை வகுப்புகள் சுயநிதி கல்லூரியாகவும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த கல்லூரியில் விழுப்புரம் மாவட்டம், சின்னப்ப சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (19) என்ற மாணவி முதலாமாண்டு B.com படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகிலேயே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று (மே 17) காலை வழக்கம்போல் கல்லூரி துவங்கிய உடன் மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கழிவறைக்கு சென்ற சில மாணவிகள், அங்கு மாணவி தனலட்சுமி தூக்குப்போட்டு தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர்.
இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவிகள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் சென்று கழிவறையில் மாணவியின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.