கடலூர்மாவட்டம், நெய்வேலி டவுன்ஷூப் வட்டம், 30ல் வசித்து வருபவர், உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக இவர் பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மகள் நிஷா (18), கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். 12ஆம் வகுப்பில் 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார், நிஷா. நீட் தேர்வில் சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
இருந்தாலும், அவரது பெற்றோர்கள் நீட் தேர்வு பயிற்சிக்காக இந்த ஆண்டு நெய்வேலி அருகே இந்திரா நகரில் அமைந்துள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி அளித்து வந்தனர். இங்கு கடந்த ஓராண்டாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிஷா வரும் மே மாதம் 7ஆம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்குத் தயாராகி வந்தார். இதற்காக அந்தப் பயிற்சி மையத்தில், தற்போது தேர்வுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த தேர்வுகளை அவர் எழுதி வந்த நிலையில் அதில் சரியான மதிப்பெண்கள் பெறவில்லை எனத் தெரியவருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா நேற்று ( ஏப்.05 ) வகுப்பு இல்லாத நிலையிலும் வகுப்பு உள்ளதாகக் கூறிவிட்டு நெய்வேலியில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு வந்தார். வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அவர் நேற்று மாலை 5:40 மணி அளவில் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் முன்பு தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் இந்த தகவலை காவல் துறையினருக்குத் தெரிவிக்க ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்விற்கு பயந்து மாணவ மாணவிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் தொடர்ந்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.