கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் ஜீவா. செவிலியர் படிப்பை முடித்த இவர், பண்ருட்டியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2005ஆம் மருத்துவமனை ஜெனரேட்டரில் ஏற்பட்ட விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்தார். இரண்டு வருடங்களாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த ஜீவா, தன் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி இருந்தார்.
தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியாமல் வெளியே செல்ல வேண்டும், மேலும் படித்த விஷயங்களை பிறருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என எண்ணிய ஜீவா, தன் வீட்டருகே உள்ள ஹிந்தி ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். ”ஹிந்தித் தேர்வு எழுத வேண்டும், உன்னால் எப்படி எழுத முடியும்?” என ஆசிரியர் கேட்டதற்கு ”என்னால் எழுத முடியும்” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் ஜீவா.
இதையடுத்து வீட்டில் இருந்த துணி ஒன்றை கட்டு போன்று தனது இடது கையில் கட்டிகொண்டு எழுத கற்றுக்கொண்டார். பின்னர் ஹிந்தி தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார். கைகளில் எழுதி அதிகம் வலி எடுக்கவே, மாற்று வழியாக கால்களில் எழுதக் கற்றுக்கொண்டார் ஜீவா.
முழுமையாக ஹிந்தி கற்றுக்கொண்ட பின், தான் பயின்ற மொழியை மற்றவர்களும் கற்க வேண்டும் என நினைத்து, தனது வீட்டின் அருகாமையில் உள்ள ஏழை மாணவ - மாணவிகளுக்கு மாலை நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.