கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள தனியார் முந்திரி கம்பெனியில் அஸ்ஸாம் மாநிலம் பாதூர்பூர் மாவட்டம் கரீம் காஞ்சி பகுதியைச் சேர்ந்த சஞ்சல்நாத் (25), சங்கர்நாத் (40) ஆகியோர் காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே உள்ள செட்டித் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை அவர்களுடைய வீட்டின் கதவை நபர் ஒருவர் தட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்த சஞ்சல்நாத், சங்கர்நாத்தையும் அந்த நபர் கையில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் அலறி துடித்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது, இவர்களைத் தாக்கிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர், காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன், காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் மலர்விழி, துணை ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். இதனையடுத்து, காயமடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், சஞ்சல்நாத் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள சங்கர்நாத் என்பவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காடாம்புலியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:முகாமிலிருந்து நேரடியாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமியர்கள்!