கடலூர்:வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
அவசர கால தொடர்புகளுக்காக 1077 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். மாவட்டம் முழுவதும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கக் கூடிய அளவில், முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ள நேற்று (நவ.13) இரவில் இருந்து தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 125 அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாக்கி டாக்கி மூலம் உடனடியாக தகவல்கள் பரிமாறப்படுவதால், உடனுக்குடன் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது. எந்த ஒரு மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். நேற்று இரவு பெய்த மழையில் கடலூர், பண்ருட்டியில் இரண்டு வீட்டு சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது.
இதில், மூன்று பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்பெண்ணை ஆறு, மணிமுத்தாறு, கெடிலம் மற்றும் கொள்ளிடம் ஆறுகள் ஆகியவற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறோம்.