கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், 'தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி கடன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடனை அரசு எவ்வாறு அடைக்கப்போகிறது என்றோ அல்லது ஈடு செய்யப்போகிறது என்பது குறித்தோ அறிவிப்பு இல்லை.
கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பையும், அண்ணாமலை பல்கலைக்கழத்தை அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.
டெல்டாப் பகுதிகளை வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிலையில், பட்ஜெட் உரையில் அது குறித்த உறுதிப்படுத்தும்படியான எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் என்று உறுதியாக கூறாமல், 'டெல்டாவைப் பாதுகாக்கப் பாடுபடுவோம்' என்றே நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் ஒஎன்ஜிசி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பில் தெளிவு இல்லை என்றும், இந்த அறிவிப்பை அதை நடைமுறைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் இல்லை' என்றும் குற்றம்சாட்டினார்.