நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து
பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ஒப்பந்த தொழிலார்கள் பணி நிரந்தரம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி தலைமை அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீண்ட ஆண்டுகளாக என்எல்சி நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் இன்று எங்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கான தொழிலார்களுடன் என்எல்சி தலைவரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருந்தோம். ஆனால் என்எல்சி நிர்வாகம் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் இதனால் நான் காவல்துறை அலுவலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் எங்களை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற எங்களை என்எல்சி தலைவர் சந்திக்க வரவில்லை, அவருக்கு பதிலாக முதன்மைப் பொது மேலாளர் சந்தித்து எங்களுடன் பேசினார்.
அவர் பேசிய விதம் திருப்திகரமாக இல்லை மேலும் அவர் பணி நிரந்தரம் குறித்தும் நம்பிக்கை ஒன்றும் அளிக்கவில்லை. எனவே, ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் - என கூறினார்.