கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் நிலக்கரி சுரங்கம் I, II மற்றும் அனல் மின் நிலையம் I, II அனல் மின் நிலைய ஒன்று விரிவாக்கம் என செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட நாள்களாக பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை அடுத்து கடந்த 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நேற்று (ஆக.01) சென்னையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், நேற்று 517 ஒப்பந்த தொழிலாளர்கள் என்எல்சி நிறுவனம் பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்து இருந்தது. இதற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உடன்பாடு இல்லை எனத் தெரிவித்திருந்தனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி முதல் என்எல்சி தலைமை அலுவலகம் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.