இயற்கை பேரிடர்களை அறிந்து கொள்ள புதிய செயலி! - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன்
கடலூர்: இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்பை தெரிந்து கொள்வதற்காக புதிய செயலி ஒன்றை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தணித்தல் துறையின் மூலமாக செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியின் பெயர் ‘TN SMART’. இதனை தங்கள் செல்போனில் உள்ள Google Play Store-யில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். இச்செயலி மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம், புயல், பேரிடர் காலங்களில் அலார்ட் செய்யப்படும். இச்செயலியை அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது.