புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு கரோனா காரணமாக ஆருத்ரா தரிசனம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் பல பிரசித்திப் பெற்ற கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி விழாக்கள் நடைபெற்று வந்தன.
அந்த வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திருவிழா நடத்துவது கூறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி தலைமையில் இன்று (டிசம்பர் 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், பொதுப்பணித்துறை, காவல் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட கடலூர் மாவட்ட உயரலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்த்திருவிழாவின்போது நடராஜர் தேர், சிவகாமசுந்தரி அம்மன் தேர் ஆகியவற்றை பக்தர்கள் இல்லாமல் இயந்திரங்கள் மூலம் இழுப்பது பற்றியும், தரிசன விழா அன்று காலையில் அபிஷேகம் நடக்கும்போது குறைவான பக்தர்கள் அனுமதிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.