தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது’ - மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரம்

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு குறித்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாகத்தெரிகிறது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழு தெரிவித்துள்ளது.

மாணவி ஸ்ரீமதி விவகாரம்
மாணவி ஸ்ரீமதி விவகாரம்

By

Published : Jul 27, 2022, 9:38 PM IST

Updated : Jul 27, 2022, 10:31 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உயிரிழந்த மாணவி 6ஆம் வகுப்பிலிருந்து படித்து வந்திருக்கிறார். சமீபத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 13ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டதில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள், பெற்றோர் இடத்தில் எழுந்தது. அதனையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு மற்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மனு தொடுத்தனர்.

இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. அதேசமயம் பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 18ஆம் தேதியன்று மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டது.

மேலும், அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவி உயிரிழந்து 11 நாள்கள் கடந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதி மாணவியின் சொந்த கிராமத்துக்கு சடலம் கொண்டு வரப்பட்டு, மாணவிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று, அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான குழுவினர் மாணவி இறப்பு தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இதற்காக ஜூலை 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதில் இரண்டாவது நாளான இன்று (ஜூலை 27) உயிரிழந்த மாணவி தங்கிய பள்ளி விடுதி மற்றும் பெற்றோரைச் சந்தித்தனர்.

இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் இரண்டு ஆலோசகர்கள் உடன் இருந்தனர். மாணவியின் சொந்த ஊரில், உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து விசாரணை செய்தனர்.

இதனையடுத்து மாணவியின் தனியார் பள்ளி விடுதியிலும் விசாரணை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவினர், "நாங்கள் கவனித்தது வரை ஆரம்பகட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதி இயக்கியது தெரியவந்துள்ளது.

பள்ளி நிர்வாகமும் மாணவி இறப்பில் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும், மாணவர்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து சரியாக ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகத்தினர் இருந்துள்ளனர்.

நாங்கள் விசாரணை செய்த அனைத்தையும் அறிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிவகாசி இளைஞர் படுகொலை சம்பவத்தில் 5 பேர் கைது!

Last Updated : Jul 27, 2022, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details