நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்காக முன்னாள் ஊராட்சித் தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மதியழகன் மனைவி சாந்தி வெற்றிபெற்றார். இதனால் மதியழகன் தரப்பினருக்கும் மாசிலாமணியின் தரப்பினருக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவந்துள்ளது. அவ்வப்போது சண்டை ஏற்பட்டு, இரு தரப்பினரும் அடிக்கடி காவல் நிலையத்தில் புகாரளித்துவந்தனர்.
இந்நிலையில், மாசிலாமணியின் தம்பி மதிவாணன் (36) நேற்றிரவு கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பத்து பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்த மாசிலாமணியின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் உயிரிழந்து கிடந்த மதிவாணனின் உடலைக் கண்டு கதறி அழுதனர். இதனால் ஆத்திரமடைந்த மாசிலாமணியின் ஆதரவாளர்கள், தாழங்குடா கிராமத்தில் ஆறு வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், 25க்கும் மேற்பட்ட படகுகள், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் தீ வைத்து எரித்துள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த மதிவாணனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்விற்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அதேசமயம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக மதியழகன் தரப்பைச் சேர்ந்த 12 பேர், மாசிலாமணி தரப்பைச் சேர்ந்த 38 பேர் என மொத்தம் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதிவாணன் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.