கடலூர்:விருத்தாசலம் - கடலூர் சாலையில் உள்ள செல்லியம்மன் கோயில் தெருவில் கலிவரதன் - ஆண்டாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் முகேஷ் ராஜ். இவருக்கும், ஆண்டாள் உடன் பிறந்த சகோதரர் ஆழ்வாரின் மகளான கீர்த்திகா என்பவருக்கும் (தாய் மாமன் மகள்) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த முகேஷ் ராஜ் - கீர்த்திகா தம்பதிக்கு 5 வயது மற்றும் ஒரு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முகேஷ் ராஜ் அவிநாசியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்திகா சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய பழக்கம் உள்ளதாகக் கருதி, அவரது கணவர் முகேஷ் ராஜ் பலமுறை கீர்த்திகாவை கண்டித்து வந்துள்ளார். மேலும் நாளடைவில் கீர்த்திகாவின் நடவடிக்கை குறித்து கீர்த்திகாவின் மாமனார் கலிவரதன் மற்றும் மாமியார் ஆண்டாள் இருவருக்கும் தெரியவந்துள்ளது.
எனவே அவர்களும் கீர்த்திகாவை பலமுறை கண்டித்துள்ளனர். இதனிடையே விருத்தாசலம் வானொலி திடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், மாமனார் கலிவரதன் மற்றும் அவரது மனைவி ஆண்டாள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது இரவு சுமார் 12.30 மணியளவில், கீர்த்திகா தனது படுக்கை அறையில் இருந்து கொண்டு யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து கோபமடைந்த மாமியார் ஆண்டாள், குளியலறை கழுவப் பயன்படுத்தப்படும் ஆசிட்டை கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் ஊற்றி உள்ளார். அது மட்டுமல்லாமல் கொசு விரட்டி மருந்தான ஆல் அவுட்டை (All-Out) கீர்த்திகாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.