கடலூர்: விருத்தாசலம் எஜமான் நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி சகீராபானு (40), 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (12), 5 -ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமவர்ஷினி(10)ஆகியோருடன்,எஜமான் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு (செப்.11) வழக்கம்போல் அனைவரும் வீட்டில் உறங்கினர். குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து உறங்கியுள்ளார். அவரது மனைவி சகீராபானு மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வெகு நேரமாகியும், கதவு திறக்காததால் குமார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தாய் மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு கதறி அழுத குமார், உடனடியாக கூச்சலிடத் தொடங்கினார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.