கடலூரில் இருந்து பண்ருட்டி, சிதம்பரம், புதுச்சேரி பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை காட்டிலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பேருந்துகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதால் மின்னல் வேகத்தில் பேருந்துகள் செல்வது வழக்கமாக உள்ளது.
தனியார் பேருந்துகள் நகரப் பகுதிகளுக்குள்ளும் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று (அக்.14) பிற்பகல் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் நகர பகுதிகளுக்குள் மிக வேகமாக வந்தது. அப்போது, எதிரே வந்த சைக்கிளன் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்தார்.
அப்போது, படிக்கட்டின் அருகே கை குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் படிக்கட்டு வழியாக தூக்கி வீசப்பட்டு பேருந்துக்கு வெளியே வந்து தலைக்குப்பற விழுந்தார். இதைக் கூட பார்க்காமல் உடனடியாக பேருந்தை ஓட்டுநர் பேருந்தை இயக்கத் தொடங்கிய நிலையில் அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினர்.