கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. சமூகநீதி என்னும் அடித்தளம் அமைத்திட வேண்டும் என்று பாடுபடும் இயக்கம் திமுக. தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும்.
ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலத் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும். கட்டாயத் திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில், தமிழ்நாடு இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள்.
திட்டக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை நீர் நிலைகளைப் பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்களாக இருப்பார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. பெண்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையமாக "அனிதா அச்சீவர்ஸ் அகாடமி" மாவட்டந்தோறும் தொடங்கப்படும். இளைஞர் சுய முன்னேற்றக் குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்கள் சிறுகுறு தொழில் தொடங்க கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால் அதேநேரத்தில் இன்றைக்கு பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இந்த ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதற்கு எத்தனையோ காரணங்களை நாம் சொல்ல முடியும்.
அதில் முக்கியமான முதல் காரணமாக 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது, டிஎன்பிஎஸ்சி மூலம் பிற மாநிலத்தவர் சேரலாம் என்ற மாற்றத்தைச் சட்டத்தில் செய்த ஆட்சிதான் இந்த ஆட்சி. இந்த லட்சணத்தில் முதலமைச்சரும் சில அமைச்சர்களும் கோட் சூட் போட்டுக் கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா மாதிரி ஒரு பயணம் நடத்தினார்கள். பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால் இதுவரையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம்? எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது? என்ற பட்டியலை இதுவரையில் அவர்கள் வெளியிடவில்லை.
அலைமோதும் திமுக தொண்டர்கள் இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. தமிழ்நாடு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்கும் வேண்டுகோள். இந்த அடிமை ஆட்சியை ஒழிக்க வேண்டும். இந்த அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.