கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூர் சமத்துவபுரம் அருகே, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.44.81 கோடி மதிப்பீட்டில், 504 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளையும், இதன் அருகாமையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் 29 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ள இடத்தையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசு மற்றும் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டு கட்டுமானப் பணிகளை பார்த்த அமைச்சர் அன்பரசு, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ்விடம், ’ஏன் இன்னும் குறிப்பிட்ட காலத்தில் இந்த பணிகள் முடிக்கவில்லை?’ என கேட்டார். உடனடியாக காண்ட்ராக்டர் எங்கே என கேட்ட அலுவலர், காண்ட்ராக்டர் வராததால் அங்கிருந்த இன்ஜினியர் ஒருவர் வந்து பதிலளித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், ‘உரிய காலத்தில் முடிக்கவில்லை என்றால் ஏன் இவர்கள் மீது அபராதம் விதிக்கவில்லை?’ என கேட்டார். உடனடியாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேலாண்மை வாரிய இயக்குனர் கோவிந்தராவ் அபராதம் விதிப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து குடியிருப்பு உட்பகுதிக்குள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பரசு மற்றும் சி.வி.கணேசன், வீட்டில் உள்ள கதவுகளை தட்டிப் பார்த்தனர். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அமைச்சர் அன்பரசு கோபத்துடன் கான்ட்ராக்டரிடம் வேலைகள் சரியாக இல்லை என தெரிவித்தார்.
அரசு அலுவலர்கள், காண்ட்ராக்ட் ஊழியர்களை வெளுத்து வாங்கிய அமைச்சர்கள்! மேலும், ‘வேலை Fine ஆக இருக்க வேண்டும். ஒர்க் நீட்டாக இருக்க வேண்டும்’ என்றார். அதற்கு அமைச்சர் சி.வி.கணேசன், ‘ஃபைன் என்றால் அர்த்தம் தெரியுமா? ஆனால், இந்த வேலை அப்படி இல்லை’ என தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் அலுவலர் ஒருவரை அழைத்து, ‘இந்த வீடு அறை வளைந்து இருப்பதை பார்த்தீர்களா?’ என கேட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர் சுற்றி சுற்றி பார்த்தார். அப்போது, ‘இதோ இந்தப் பக்கத்தில் கோணலாக இருக்கிறது’ என்று காண்பித்தார். மேலும் ‘அமைச்சர் வரும் பொழுது உரிய பதில் கூறுவதற்கு ஆவணங்களை ஏன் கொண்டு வரவில்லை?, ‘2021 ல் முடிக்கப்பட்ட வேண்டிய வேலை மேலும் காலக் கூடுதலாக கொடுக்கப்பட்டு 30.8.2022 க்குள் முடித்திருக்க வேண்டும்’ என கோபமாக பேசினார்.
இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'சிதிலமடைந்த வீட்டை சீக்கிரம் கட்டித்தாருங்கள்' - குட்லாடம்பட்டி சமத்துவபுரம் மக்கள் கோரிக்கை!