அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முதல் நேற்று காலை வரை சுமார் 36 மணி நேரத்தில் கடலூரில் மட்டும் 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் மாநகரில் பல இடங்களில் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 12 மின் மோட்டார்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதியில் பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் என 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைக்க 24 முகாம்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, நேற்று காலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் வந்து பார்வையிட்டார்.
பின்னர், அவர் கடலூர் வில்வநகரில் உள்ள பெருமாள் குளம் மற்றும் அதன் அருகில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும் புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனையும் அமைச்சர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார். அப்போது, அவர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை ஊழியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் மாவட்டம் பிற மாவட்டங்களின் வடிகால் மாவட்டமாக உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைக் காட்டிலும், 23 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. மேலும், மாநகராட்சி பகுதியில் 512 சிறு பாலங்களுடன் உள்ள வடிகால் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால், தற்போது பெய்துள்ள மழையால் எவ்வித பாதிப்பும் இல்லை. பெய்த மழைநீர் அனைத்தும் வடிந்து விட்டது.
வடகிழக்கு பருவ மழையால் இதுவரை 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 36 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளது. மேலும், பயிர் காப்பீடுக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் பயிர் சாகுபடி செய்து, அதற்கு காப்பீடு செய்துள்ளனர்.
ஆனால் தற்போது 5 லட்சம் பேர் இதுவரை சாகுபடி பணியை தொடங்கவில்லை. இருப்பினும் தொடர் விடுமுறையால் பலர் காப்பீடு செய்யவில்லை. அதனால் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பரோலில் செல்லும் சிறைக் கைதிகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி" - மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டம் என்ன?