கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 14 பேரூராட்சி என அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடலூர் திமுக அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (பிப். 22) நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை கூறினார். பின்னர், செய்தியாளரைச் சந்தித்த அவர் கூறுகையில், "கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியைக் கூட திமுக கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது நகராட்சி, பேரூராட்சி என அனைத்தையும் திமுக கைப்பற்றி உள்ளது.
முதலமைச்சரின் உழைப்புதான் காரணம்
அதற்கு காரணம், முதலமைச்சரின் ஒன்பது மாத ஓய்வில்லாத உழைப்புதான். அவர் தர்மபுரி மாவட்டத்திற்கு என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன் காரணமாக, அவர் மீது உள்ள நம்பிக்கையில் பொதுமக்கள் தற்போது முழுமையான வெற்றியைக் கொடுதுள்ளனர்.
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு இதேபோல், பத்தாண்டு காலம் கடலூர் மாவட்டத்தில் அமைச்சராக இருந்த தொழில்துறை அமைச்சர் (எம்.சி.சம்பத்) எதுவும் செய்யவில்லை. எனவே, கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையிலும், முதலமைச்சர் ஸ்டாலின் மீது உள்ள நம்பிக்கையிலும் பொதுமக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைப்பதற்கு உறுதுணையாக இருப்போம்" எனத் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தர்மபுரி மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்களிக்காத மக்கள் வருத்தப்படும்படி பணி இருக்க வேண்டும் - ஸ்டாலின்