கடலூர்: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முதலமைச்சர் தலைமையில் கடந்த 19-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அது குறித்த ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாவட்டமாக உள்ளது. 57 கிலோ மீட்டர் கடற்கரையும், 5 ஆறுகளின் வடிகால் நிலமாகவும் கடலூர் மாவட்டம் உள்ளதால் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மிகவும் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 22 பகுதிகளும், அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 39 பகுதிகளும், மிதமாகப் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 20 பகுதிகளும், குறைவாகப் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 158 பகுதிகள் என மொத்தம் 239 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் அனைத்திலும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 28 புயல் பாதுகாப்பு மையங்களில் 8,400 நபர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் 15 ஆயிரத்து 800 நபர்களும், 191 தற்காலிக தங்கும் இடங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 875 நபர்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.