சென்னை:கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் குமளங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயலட்சுமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமியை விட ஆயிரத்து 34 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். ஆனால், சில மணி நேரங்களில், விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதை எதிர்த்து ஜெயலட்சுமியும், தன்னை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என விஜயலட்சுமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிக வாக்குகள் பெற்றதாக முடிவெடுக்கப்பட்ட ஜெயலட்சுமியை ஒரு வாரத்தில் தலைவராக அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், குளறுபடிகள் நடந்துள்ளதென தேர்தல் அலுவலரே ஒப்புக்கொண்டுள்ளதாலும், தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து வழக்கு தொடர வேண்டுமானால் சம்மந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் எனவும் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், வழக்கு குறித்து ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது செல்லும்' - உயர் நீதிமன்ற மதுரை கிளை