கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து, பொதுமக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, களப்பணி ஆற்ற வேண்டிய அரசு அவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுவருவதாக மக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சூழலில் களப்பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகைதருகிறார். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், சுகாதாரத் துறையினர், விவசாய பெருமக்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் 50 நபர்கள் மட்டும் பங்கேற்கக் கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் மூன்று அல்லது ஐந்து நபர்களுக்கு மட்டும் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்து நன்றாக இருக்கும் தார்ச்சாலைகள் மீது புதிய தார்ச்சாலை போடுதல், மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்த ஏராளமான மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மணலைக் கொட்டி 40 அடி அகலம் 120 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மேடை என விதிமுறை மீறல்கள் நடைபெறுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகப் போதுமான சாலை வசதிகள் இல்லாத நிலையில் நன்றாக இருக்கும் சாலை மீது தேவையில்லாத புதிய சாலைகள், மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்த கட்டமைப்பை மாற்றி அமைத்தல் போன்ற அத்துமீறல்களுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சி குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு உரிய வழிகாட்டுதல் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.