கொத்தடிமை முறையை ஒழிக்கவும், அதிலிருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும் கொத்தடிமை முறையில் பல தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர்.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகிலுள்ள பரவத்தூர் பகுதியைச் சேர்ந்த 9 பேர், ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டம் பிரகாஷ் ஜில்லாவைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 19 பேர் குடும்பத்துடன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தங்கியிருந்து சவுக்கு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.
இவர்கள் தங்களை திருத்தணியைச் சேர்ந்த முகவர் ஒருவர் முன்பணம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொத்தடிமையாக வேலைக்குப் பயன்படுத்திவருவதாகத் தொண்டு நிறுவனம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
அத்தகவலின் அடிப்படையில் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் பண்ருட்டி வட்டம் திருவாமூர் சென்று விசாரணை நடத்தி 19 பேரையும் கடலூர் அழைத்துவந்து நகராட்சிப்பள்ளியில் தங்கவைத்துள்ளார். பின்னர் அவர்களை திருத்தணி வட்டாட்சியரிடம் ஒப்படைப்பதற்காக வாகனம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வாகனத்தில் ஏற மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து இத்தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், ”எங்களை கொத்தடிமையாக வேலை வாங்கிய நபரை அரசு கைதுசெய்யாமல் நாங்கள் ஊருக்குச் செல்லமாட்டோம். ஒருவேளை நாங்கள் ஊருக்குச் சென்றாலும் அந்நபர் ரூ.10 ஆயிரம் முன்பணத்திற்குப் பதிலாக ரூ.1 லட்சம் தர வேண்டும் என மிரட்டுகிறார்.
நாங்கள் தரவில்லையென்றால் அவர்கள் கூறும் வேலையை வேறு ஊரில் கொத்தடிமையாக வேலை செய்து தீர்க்க வேண்டும் என அச்சுறுத்துகிறார். கொத்தடிமையாக இருந்த எங்களை மீட்கப்பட்டதற்கான சான்றும், கொத்தடிமையாக வேலை வாங்கியவர் மீது உரிய வழக்குப்பதிவும் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடலூரை விட்டு செல்ல மாட்டோம் ” என்றனர்.
இதையும் படிங்க:போதிய விலை கிடைக்காத விரக்தி: சாலையில் காய்கறிகளைக் கொட்டி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!