நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா அனுப்பி ஒரு மாதங்கள் கடந்தும் இதற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்கக் கோரி, முதலமைச்சர், அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எனப் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தித்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.