கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு என்பவரின் மகன் செந்தமிழ்ச்செல்வன் (22). பிஎஸ்சி பட்டதாரியான இவர் B. முட்லூர்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்திவந்துள்ளார். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த முபீனா(22) என்ற பெண் அவருடைய கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
காதலுக்கு பாதுகாப்பு! காவல்நிலையத்தில் புகார் !
கடலூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மனு அளித்தனர்.
இதனையடுத்து, முபீனா தன் காதலை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முபீனாவின் பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை தேடிவந்தனர். இதனைத் தொடர்ந்து முபீனா தன் காதலன் செந்தமிழ்ச்செல்வனை கோவைக்கு அழைத்துச் சென்று கடந்த 23ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு இருவரும் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ”முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொள்ள எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுதவிர பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் முபீனாவை காணவில்லை என்று அவர்கள் குடும்பத்தினர் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு நடந்த திருமணம் எங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றது எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.