கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 4139 ஓட்டுகள் உள்ளது. தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி என்பவர் 1179 ஓட்டுகள் பெற்றார். ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி என்பவர் 2860 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதில், ஆட்டோ சின்னம் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் அலுவலர்கள் ஜெயலட்சுமி என்ற பெயரை விஜயலட்சுமி என்று தவறுதலாக அறிவித்து அவர் வெற்றிபெற்றதாக சான்றிதழும் வழங்கினர். பெயர் குழப்பத்தினால் வெற்றிபெற்றவருக்கு பதிலாக தோற்றவருக்கு சான்றிதழ் வாங்கியதால் ஜெயலட்சுமி வாக்கு எண்ணும் மையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் விஜயலட்சுமியை பதவி ஏற்க அனுமதிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு பதவியேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். அதனால், தவறாக மாற்றி அறிவித்து பின்னர் சின்னங்களையும் மாற்றிய தேர்தல் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன் பதவியேற்பு நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.