கடலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள 3,165 பதவியிடங்களுக்கானத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் இத்தேர்தலில் மொத்தமுள்ள 14 லட்சத்து 44 ஆயிரத்து 975 வாக்காளர்களில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 812 பேர் வாக்களித்து 3,165 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்காக, இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் விலங்கல்பட்டு ஊராட்சி பகுதியில் போட்டியிடும் மோகனாமணிபாலன் என்கிற சுயேச்சை வேட்பாளரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. 40 பேர் அந்த வார்டில் வாக்களித்த நிலையில் அந்த வேட்பாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து அலுவலர்கள் ஆலோசித்து வந்தனர். பின்னர் பதிவான ஓட்டுகள் செல்லாது என அலுவலர்கள் அறிவித்தனர். பின்னர் அவரின் சின்னம் இடம்பெற்ற பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.