தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20 ஆயிரத்து 520 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடைபெற்று, 20 ஆயிரத்து 370 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் கடலூர் கோண்டூர், திருமாணிக்குழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுக்கு 'குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னம்' ஒதுக்கியதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.
அதனை பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு உதயசூரியன் சின்னம் வேண்டும் என்று கேட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.
இதுபற்றி அறிந்த அதிமுகவினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு, உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தேர்தல் அலுவலர் அருள் அரசனை அதிமுகவினர் தள்ளிவிட்டு தாக்கினர். இதனால் அப்பெரும் பரபரப்பு நிலவியது.
தேர்தல் அலுவலரை தாக்கும் அதிமுகவினர் மேலும், அதிமுகவினர் அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த புதுநகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த அலுவலர்கள் சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மேல் அதிகாரிக்கு விளக்கக் கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அதிமுகவினர் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
விசிக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு