தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவக் கொலை - 12 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கொலை வழக்கு

2003ஆம் ஆண்டு நடந்த ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முருகேசன் - கண்ணகி
முருகேசன் - கண்ணகி

By

Published : Sep 24, 2021, 6:42 PM IST

Updated : Sep 24, 2021, 8:27 PM IST

கடலூர்: விருத்தாசலம் அடுத்த புத்துக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கண்ணகி. இவருக்கும், குப்பந்த்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன், என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், 2003ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், கண்ணகியை தனது உறவினர் வீட்டில் விட்ட முருகேசன், வெளியூர் சென்று வேலை செய்துவந்தார். இதனையடுத்து, 2003ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி, கண்ணகியின் உறவினர்கள், முருகேசன் - கண்ணகி ஆகியோரை அவர்களது ஊர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சிபிஐ விசாரணை

அங்கு, இருவரது காது, மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்தனர். பின்னர் இருவரது உடலையும் அடையாளம் தெரியாத வகையில் தீவைத்து எரித்தனர். இது குறித்து முருகேசன் உறவினர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருந்தபோதிலும், ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்ய மறுத்தனர்.

இது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் வழக்கு குற்ற எண் 356 - 2003ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பின் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

மேலும், கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன், ரங்கசாமி, முருகேசன், அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, முருகேசன், குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை ஆகிய 15 பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி

இந்த வழக்கு கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, கடலூர் எஸ்சி., எஸ்டி., நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் 36 பேர் பிறழ் சாட்சியாக மாறினர். இந்நிலையில், இன்று (செப்.24) இந்த வழக்கை நீதிபதி உத்தமராஜா விசாரித்தார்.

பின்னர், கண்ணகி அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்குத் தண்டனையும், அப்போது ஆய்வாளராக இருந்து செல்லமுத்து ( டிஎஸ்பி.,யாக இருந்து தற்போது ஓய்வில் இருக்கிறார்), உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் (தற்போது ஆய்வாளர்), கண்ணகி அப்பா உள்பட 12 பேருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

முருகேசன், அய்யாசாமி, குணசேகரன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு குறித்து நீதிபதி உத்தமராஜா கூறுகையில், “மனிதகுலத்தை அச்சுறுத்தும் விதமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்கவே இந்த தண்டனை வழங்கப்பட்டது. இனியாவது தமிழ் மண் வரலாற்றில் கண்ணகி எரிக்கப்பட்டதே கடைசியாக இருக்கட்டும்” என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாணவிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி

Last Updated : Sep 24, 2021, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details