கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (வயது 35) மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை விசாரிப்பதற்காக சுப்பிரமணியை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர் அங்கேயே திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரே சுப்பிரமணியை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்றும் சுப்பிரமணியின் மனைவி ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், காவலர் சவுமியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.