கடலூர்:சிதம்பரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.1) ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டு மக்களை மீட்கத் தான் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அரசியல் அதிகாரம் பெறுவதற்கு மட்டும் நடைபயணம் இல்லை. நாட்டினுடைய பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் சாதி, மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கிறார்கள். ரூ.130 கோடி மக்களுக்கு வழிகாட்டுதலாக இந்த நடைபயணம் அமைந்துள்ளது.
பெட்ரோல் விலையும் சிலிண்டர் விலையும்:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரூ.70-க்கு பெட்ரோல் கிடைத்தது. அன்று கச்சா எண்ணெய் விலை $108 அமெரிக்க டாலர். ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை $70 அமெரிக்க டாலர். ஆனால், பெட்ரோல் விலை ரூ.100. இதற்கு மோடியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. ரூ.400-க்கு பெண்களுக்கு சமையல் ஏரிவாயு, மன்மோகன் சிங் காலத்தில் வழங்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1200ஆக உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கேட்டால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் உரிய பதில் சொல்ல முடியவில்லை.
பத்து வருடங்களுக்கு முன், மன்மோகன் சிங் செய்ததை ஏன் இன்று மோடியால் செய்ய முடியவில்லை. இந்த கேள்விக்கு இன்று வரை அவர்கள் பதில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக மோடி, சிறப்பாக ஆட்சி செய்வதாக பதில் சொல்கிறார். பண மதிப்பு இழப்பின் காரணமாக, அரசுக்கு மக்களுக்கும் எந்தப்பலனும் கிடைக்கவில்லை; கேடு தான் கிடைத்தது. ஜனநாயகத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
காஷ்மீர் விவகாரம்:இதுதான் தங்கள் கடமை என்றும் காஷ்மீரில் மக்களின் உரிமையை பாதுகாத்தோம் என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்று மோடி அரசு, மூன்று மாநிலங்களாக காஷ்மீரை உடைத்துவிட்டார். இதனால், காஷ்மீருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை; மக்களுக்கும் எந்த லாபமும் கிடைக்கவில்லை. இந்தியாவிற்கும் எந்த லாபமும் கிடைக்கவில்லை.