தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை - கே பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்! - கே.பாலகிருஷ்ணன் (CPI-M)
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்! - கே.பாலகிருஷ்ணன் (CPI-M)

By

Published : Jun 27, 2023, 6:50 AM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

கடலூர் :கடலூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு பொது சிவில் போர்டு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறி வருகிறது.

ஆனால் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் உள்ளது. நாடாளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

குழந்தை திருமணம் - ஆளுநர் பேச்சு:1986ஆம் ஆண்டு குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களில் ஆண்டுதோறும் குழந்தைத் திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது ஆதாரப்பூர்வமாக இச்செயல் தெரிவிக்கப்பட்டதால், தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், அவர்களை கைது செய்த போலீசாரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டிக்கிறார். மேலும் அவர், பெண்களுக்கு இருவிரல் சோதனை நடந்ததாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வருகிறார். நானே குழந்தைத் திருமணம் செய்துள்ளேன் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்:சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து, பொதுமக்களிடம் தகராறு செய்து வருகின்றனர். இதை கேட்ட அதிகாரிகளிடமும் தகராறு செய்கிறார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ள கோயில்கள், சொத்துக்கள் மற்றும் நகைகளை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் குரல் கொடுத்து வருகிறார்கள். இது எப்படி சாத்தியம்? தனியாரிடம் கொடுத்தால், எப்படி பாதுகாப்பாக இருக்கும்?

கள்ளச்சாராயம் விற்பனை - காவல் துறை ஒத்துழைப்பு:25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் கள்ளச்சாராயத்தையோ, போதை பொருட்கள் விற்பனையையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மதுவிலக்கு துறை மற்றும் காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சாராயம், போதை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது.

காவல் துறையில் வேலை பார்க்கும் சிலரால் ஒட்டு மொத்த காவல் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு கள்ளச்சாராயம் விற்பனை, போதை பொருட்கள் விற்பனையையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 500 மதுக்கடைகளை மூடி உள்ளனர். இது நல்ல நடவடிக்கை. இருப்பினும் படிப்படியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட நடவடிக்கை வேண்டும்.

பாஜகவை எதிர்த்து கூட்டணி:அகில இந்திய அளவில் பாஜக ஆட்சியை எதிர்த்து எதிர்கட்சிகளிடம் ஒரு வலுவான ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் இப்படி ஒரு ஒற்றுமை ஏற்படவில்லை. 3இல் ஒரு பகுதி வாக்கு பெற்று மத்தியில் மீண்டும் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. இந்த முறை பாஜகவை எதிர்க்கிற அந்த வாக்குகளை எல்லாம், எவ்வளவு அதிகமான ஒற்றுமை ஏற்பட வேண்டுமோ, அந்த அளவுக்கு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

இந்த ஒற்றுமை மேலும் வளர வேண்டும். அகில இந்திய அளவில் ஒரே கூட்டணி என்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்த்து எப்படி வலுவான கூட்டணி உள்ளதோ, அதேபோல் அந்தந்த மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணி, பலமான கட்சிகள் தலைமையில் அமைய வேண்டும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெறுவோம். தனியார் பேருந்து விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றில் வாழைகள் முறிந்து சேதமடைந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இந்தியாவை பற்றி ஒபாமாவுக்கு என்ன தெரியும்..." மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details