கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாராந்திர இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை பள்ளி மாணவிகளுக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், ரத்த சோகை தடுப்புத் திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் வளர் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வாரம்தோறும் வியாழக்கிழமையன்று இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் பொது சுகாதாரத்துறை மூலமாக ஜூன் 2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி தாய்மார்களில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. எதிர் காலத்தில் பெண்கள் கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாத வண்ணம் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக இன்றைய வளர் இளம் பெண்களுக்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரதி வியாழக்கிழமை தோறும் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்குச் செல்லாத வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையத்தின் மூலமாக இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 2,00,184 மாணவ, மாணவிகளுக்கு, அங்கன்வாடி மையங்களின் மூலமாக 38,216 வளர் இளம் பயனாளிகளுக்கும் இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.