கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி 16 கிலோ மீட்டர் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி. ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் சென்னை பெருநகர மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு இந்த ஏரிக்கு உண்டு. அதாவது வீராணம் ஏரியில் இருக்கும் தண்ணீர்அளவைப் பொறுத்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும். கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கடந்த மாதம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் 39.30 அடியாக குறைந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் 13ஆம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது, பின்னர் கீழணை வந்த நீர் கீழணையின் மொத்த நீர்மட்டமான ஒன்பது அடியில் ஐந்தடியை எட்டியதும், வடவாறு வழியாக இரண்டாயிரத்து 600 கன அடி நீரை பொதுப்பணித்துறை அலுவலர்கள் வீராணம் ஏரிக்கு திறந்துவிட்டனர். அதாவது தண்ணீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வீராணம் ஏரியை திறந்து வைத்தார் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து கடல் போல் காட்சி அளித்தது. அதனால் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் ஏரியிலிருந்து தண்ணீரை திறந்துவைத்தனர். அதில் 34 மதகுகளும் திறக்கப்பட்டதில், விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலூரில் உள்ள 102 கிராமங்களில் அமைந்துள்ள 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.