பண்ருட்டியில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் கடலூர்:இந்திய முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் பகுதிகளில் ஒன்று பண்ருட்டி. பண்ருட்டியில் பயிரிடப்படும் முந்திரிகளுக்கு தனிச் சுவை உண்டு. மேலும் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 28,500 ஏக்கர் பரப்பளவில் முந்திரிக் காடுகள் பயிரிடப்படுகின்றன.
அதிலிருந்து சுமார் 22,168 மெட்ரிக் டன் முந்திரிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முந்திரிகள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணியை இப்பகுதி ஈட்டித்தருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தொழில்துறைக்கான மின்கட்டண உயர்வால், தொழில்துறை கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கூறி, 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் இன்று (செப்.25) மாநிலம் தழுவிய ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை 6 மணி முதல் சிறு குறு தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், ஆட்டோ லூம்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகளை சார்ந்த, சுமார் 3 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளின உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பண்ருட்டி பகுதியில் 20% ஏற்றுமதியாளர்கள் உள்ளதாகவும், முந்திரி பருப்பை ரகம் பிரித்து, பதப்படுத்த 300 நடுத்தர தொழிற்சாலைகள், 1000 சிறு குறு தொழிற்சாலைகள், கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பெண் தொழிலாளர்களும் முந்திரி கொட்டைகளை உடைத்து, பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த வேலை நிறுத்தத்தால் பண்ருட்டியில் மட்டும் 50 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்படும் என முந்திரி தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொழிற்துறைக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், பீக் அவர்ஸ் (Peak Hours) கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், (3b) மின் கட்டண முறையை ரத்து செய்து, (3 a1) கட்டண முறையை நடைமுறை படுத்தி சிறு குறு நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்றும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை கைவிட வேண்டும் என ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகள்.. காரணம் என்ன? மாநகராட்சி நடவடிக்கை என்ன?