கடலூர்: தமிழ்நாட்டில் கிராம இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் எனப் பலரின் தொடர் முயற்சியால் இன்று கிராம சபை குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களது முயற்சிகளுக்கெல்லாம் பெரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமைந்துள்ளது.
அதாவது ஒரு கிராம ஊராட்சி தனது தேவைக்கேற்ப ஒரு ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் கிராமசபைக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் எனவும், அதற்கு அரசின் ஒப்புதலையோ மாவட்ட ஆட்சியரின் அனுமதியையோ பெறத் தேவையில்லை என்றும் ஏற்கெனவே தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திலிருந்த வழிமுறைகளை உறுதிப்படுத்தியது.
வெற்றி கண்ட முயற்சி; ஆர்வத்துடன் கலந்துகொண்ட மக்கள்
கிராமசபைக் கூட்டம் ஆண்டுக்கு நான்கு நாள்களுக்கு மட்டும்தான் நடத்தப்படவேண்டும் என்று செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலையை மாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த உத்தரவு, உள்ளாட்சியை வலுப்படுத்தும் பணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.