கடலூர் மாவட்டம் வண்ணாத்தூர் கிராமம் மணிமுத்தாற்றின் அருகே கடந்த 5ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் ராஜூ, கிராம உதவியாளர் காளிதாசன் இருவரும் மணல் திருடப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அலுவலர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணல் கடத்தி வந்தவர்கள் விருதாச்சலம் கச்சிபெருமாநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரமூர்த்தி(35), பிரகாஷ்(33) என்பது தெரியவந்தது. மணல் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சிவசங்கரமூர்த்தி என்பவர் மீது ஏற்கனவே கடலூர், விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் உள்ளன.
எனவே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், சிவசங்கரமூர்த்தியை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு பிரிவு காவலில் வைக்க ஆணையிட்டார். தொடர்ந்து சிவசங்கரமூர்த்தி குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கடலூர் மாவட்டத்தில் மூன்றுபேர் மீது குண்டர் சட்டம்- காவல் துறை நடவடிக்கை!