தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது... ஜி.கே வாசன்...

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 20, 2022, 5:31 PM IST

ஜி.கே வாசன் பேச்சு
ஜி.கே வாசன் பேச்சு

கடலூர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா மற்றும் விவசாயிகள் தின பொதுக்கூட்டம் கடலூர் கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. உரையாற்றினர்.

அப்போது அவர் பேசியதாவது, “விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் அரசாக, விவசாயிகள் நலன் காக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய அரசு 5.6 மடங்கு அதிகரித்துள்ளது.

பயிர்க்காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு கடன் உதவி, நுண்ணீர் பாசன திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் உதவி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது.

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என மக்களை பாதிக்கும் ‘நம்பர் 1’ மாடல் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. விளை பொருள்களுக்கு உரிய விலை இல்லை. உரம், பூச்சி கொல்லி மருந்துகளை போதிய அளவில் வழங்குவதில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை, நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஏழை, எளிய மக்கள் அடமானம் வைத்த நகைகளை திருப்ப முடியாமல் உள்ளனர்.

ஆகவே அவர்களிடம் திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதை இந்த அரச முறைப்படுத்த வேண்டும். என்.எல்.சி. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு த.மா.க. துணை நிற்கும். உங்களுக்காக நான் நிச்சயம் டெல்லியில் குரல் கொடுப்பேன்.

ஜி.கே வாசன்

1½ ஆண்டு திமுக ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சி எப்போது வெளியேறும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். அந்த கடமையை நீங்கள் செய்ய வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம், போதை பொருள்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, வங்கியில் கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, ஆவின் விலை உயர்வு என இது போன்ற பிரச்சினைகளை மறந்து விடாமல் மக்கள் நியாபகம் வைத்திருக்க வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்மாநில காங்கிரசின் கட்சியின் நல்ல வழிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்… மனோஜ் பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details