கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கெடியேற்று விழா நேற்று (டிச.7) நடைபெற்றது. இவ்விழா தெற்கு மாவட்ட துணை தலைவர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கொடியேற்றினார். முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பற்றியும், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் சிறப்பினையும் எடுத்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் கட்சி வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படுதல் தேவையில்லை. ஒரு பின்னடைவு ஏற்பட்டால் மேலும் மக்களுக்கு உழைத்து, அவர்களை மேம்படுத்த வேண்டும் என்று கருத வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அத்திக்கடவு திட்ட மூலம் தரிசு நிலங்கள் கைப்பற்றி வருகிறது. இது கார்ப்பரேட் அரசு என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவிநாசி அத்திக்கடவு திட்டம் தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்சாலைகளுக்காக அளிக்கின்றது. நிலங்களை கையகப்படுத்துவது என்பது எவ்வாறு கையகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கிற வழிகாட்டுதலின்படி மாநில அரசு செயல்படுகிறது. எனவே குறைபாடுகள் இருந்தால் அண்ணாமலை, மோடியிடம் தான் கேட்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். கலைஞரும் ஒரு காரணம். மற்றவர்கள் அதை உரிமை கொண்டாடுகிற தகுதியே கிடையாது. தேசத்தில் ஏழு ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளை உலக அளவில் வளர்த்திருப்பது மோடி அரசாங்கம் தான் என்றார்.
மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே துறை இருந்தது. இப்பொழுது இரண்டும் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்கள். இன்றைக்கு இதையெல்லாம் தனியாருக்கு தாரைவார்த்தது மோடி அரசுதான். பிஎஸ்என்எல்-யை சாகடித்து அம்பானி கொண்டு வந்த ஜியோ என்ற பெயரை நிறுவி இருக்கிறார். அதேபோன்று ரயில்வேயை பணக்காரர்களுக்கு, ரயில் பெட்டிகளை மட்டுமல்ல ரயில்வே நிலையங்களை கூட பொதுவுடமையில் இருந்து தனி உடைமையாக ஆக்கியிருக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.