ஊரடங்கின் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் குடிமகன்கள் தள்ளாடிவருகின்றனர். இதை பயன்படுத்தி, சிலர் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கடலூரில் உள்ள எஸ். புதூர் கிராமத்தில் கள்ளத்தனமாக வாழைத்தோட்டத்திலும், கரும்பு தோட்டத்திலும் சாராயம் காய்ச்சி செல்ஃபோன் மூலம் அதிக விலைக்கு விற்றுவருவதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்திக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த தனசேகர் (48), சக்திவேல்(41), தனசேகர் (36), சிவமணி (33) ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்த காவல் துறை மேலும், அங்கு வைத்திருந்த 150 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த காவல் துறையினர், இச்சம்பவத்தில் மேலும் தொடர்புடைய சிவகுமார், அருண், ராம்குமார் ஆகியோரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு: தப்பியோடிய இளைஞருக்கு போலீஸ் வலை!