தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலையை அனுமதிக்க மீனவர்கள் போராட்டம், கடலுக்குள் இறங்கிய பெண்களால் பரபரப்பு

கடலூர்: சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி குடும்பத்தினருடன் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திடீரென பெண்கள் கடலுக்குள் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

fishermen protest against ban on purse seine nets in cuddalore
fishermen protest against ban on purse seine nets in cuddalore

By

Published : Jul 12, 2020, 1:37 AM IST

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 1ஆம் தேதி முதல் தடையை மீறி மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முற்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையுடன் இருந்த படகுகளை அலுவலர்கள் சீல் வைத்தனர். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அலுவலர்களின் வாகனங்களை சிறைபிடித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சுருக்குமடி வலைகள் தடை செய்யப்பட்டது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் யாரும் தலையிட முடியாது, அதனால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

கடலுக்குள் இறங்கிய பெண்களால் பரபரப்பு

ஆனால் அதையும் மீறி நேற்று முன்தினம் (ஜூலை 9) மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இதனால் மீன்வளத்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் (ஜூலை10) சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த மீன்களை எங்கும் விற்பனை செய்யக்கூடாது, அந்த மீன்களை வியாபரிகள் வாங்கவும்கூடாது என உத்தரவிட்டனர். ஆனால் மீனவர்கள் அதனை கருத்தில்கொள்ளாமல் மீன்களை விற்பனைசெய்தனர். இதனை அறிந்த மீன்வளதுறை அலுவலர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை வாங்கிச் சென்ற 21 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்களும் வியாபாரிகளும் கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு மீன்வளத்துறை அலுவலர்கள் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதித்து பின்னர் விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 11) அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலை மீதான தடையினை நீக்க வலியுறுத்தியும், அதனை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கக் கோரியும் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறிமுதல் செய்யும் மீன்வளதுறை அலுவலர்களின் நடவடிக்கையை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவர்கள் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகளை கடலில் நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

மீனவர்களின் குடும்பங்களைச் சேரந்த பெண்கள், குழந்தைகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கையில் கறுப்பு கொடி ஏந்தி தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டம் நடத்திய பெண்கள் திடீரென கடலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள், தீயணைப்பு துறையினர் கடலில் இறங்கி அவர்களை மீட்டனர்.

இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க...சுருக்குமடி வலை, சீன எஞ்ஜினுக்கு அனுமதிக்கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details