கடலூர்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (ஆக.31) அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முதற்கட்டமாக, கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டறிந்து, அது தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம், நிலங்களைப் பதிவு செய்ய வந்தவர்களிடம் இருந்து பெற்ற லஞ்சப் பணம் என்பது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா, நாள்தோறும் அலுவலகத்திற்குப் பத்திரப்பதிவு செய்வதற்கு வரக்கூடிய பொதுமக்களிடம் வாங்கப்படும் லஞ்சப் பணத்தை இரண்டு அல்லது மூன்று லட்சமாகச் சேர்த்து உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை வாங்கியுள்ளதாகவும், அதற்காக, தான் வாங்கிய லஞ்சப் பணத்தை Goole pay மற்றும் bank transfer மூலமாக ரூபாய் 42 லட்சம் வரை சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு அனுப்பியதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.