கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், உரிய விசாரணை நடத்த கடலூர் கோட்டாட்சியருக்கும், வாக்காளர் பதிவு அலுவலருக்கும் உத்தரவிட்டார். அதையடுத்து, கோட்டாட்சியர் அங்கு நேரில் சென்று, அப்பகுதியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் ஷேக் பரீத் (46) என்பவர் போலியாக வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை தயாரித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.