கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் சையது கலீல். இவர் பண்ருட்டி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சீனியர் அசிஸ்டன்ட்டாக பணியாற்றி வந்தார். பின்னர், அதே வங்கியில் தன்னுடன் பணியாற்றிய லட்சுமி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கமால் பாபு என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். குழந்தையாக இருந்த கமால் பாபுவை வங்கிக்குச் செல்லும்போது தன்னுடன் அழைத்துச் செல்வார்கள். மேலும் 15 வயது கமால் பாபுவுக்கு அவருடைய தந்தை சையது கலீல், தன்னுடைய வேலையை வேடிக்கையாக கற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பணியில் இருக்கும்போதே சையது கலீல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் கமால் பாபு மன ரீதியில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் வாரிசுதாரர் அடிப்படையில் தந்தையின் வேலை தனக்கு வேண்டும் என கமால் பாபு மின்னஞ்சல் மூலம் வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். தொடர்ந்து நேரில் சென்று பலமுறையும் கேட்டும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் மன விரக்தியில் அதிக பாதிப்புக்குள்ளான கமால் பாபு, அதே பகுதியில் உள்ள வடக்கு பஜாரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்கிற பெயரில் வங்கி கிளை தொடங்க அனுமதிக்குமாறு, வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சலை வங்கி நிர்வாகம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, மேலும் மன ரீதியில் பாதிக்கப்பட்ட கமால் பாபு, வீட்டுக்குள்ளயே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருப்பது போல கம்ப்யூட்டர், பிரின்டர், செல்லான், வங்கி சீல், 16 பேர் வேலை செய்வது போல் வருகைப் பதிவு என போலியாக ஒரு வங்கியை செட்டப் செய்து உள்ளார். அதனைத்தொடர்ந்து தனது அம்மா, பெரியம்மாவின் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு தெரிந்திருந்ததால் இவர்களுக்குள் மட்டும் பணத்தை ஆன்லைன் பரிமாற்றம் செய்துள்ளார். மற்றபடி வேறு யாருக்கும் தொந்தரவு தரவில்லை.