முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் செயல்பாடுகளைப் போற்றும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூ.2.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ”1980ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக எம்ஜிஆர் உயர்த்தினார். பட்டியலினத்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சேர்த்து தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதனை நிலைபெறச் செய்து சமூகநீதி காத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. 1993ஆம் ஆண்டில் சட்டம் இயற்றி அரசியலமைப்பு சட்டம் 9ஆவது அட்டவணையில் சேர்த்து அரசியலமைப்பு பாதுகாப்பு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.