இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நத்தமலை பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கின்ற பெர்னாட்சா (35), மனைவி மணிமேகலை (30), குழந்தைகள் வசந்த ராஜா (15), நிசா (16) ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது திடீரென ராஜா தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை குடும்பத்தினரின் தலையில் ஊற்றி மொத்தமாக தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்தனர். இதையடுத்து காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் கொண்டு வந்த மனுவில், ''எனக்கு சொந்தமான டூரிஸ்ட் வேனை காட்டுமன்னார்குடி முத்தமிழ் மோட்டார்ஸ் சங்கத்தில் பதிவு செய்து ஓட்டி வருகிறேன். காலை நேரத்தில் வேன் ஸ்டாண்டில் ஓட்டிவிட்டு இரவு நேரத்தில் சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு செல்வேன்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற குடும்பம் அப்போது அதன் பக்கத்தில் பஞ்சர் கடை நடத்திவரும் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உனது வேனின் கண்ணாடி உடைந்துள்ளது என கூறினார். உடனே பாதுகாப்பு கருதி வேனை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் போது சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது.
அப்போது வேனை பார்த்தபோது டீசல் டேங்கில் யாரோ சர்க்கரையை கொட்டி உள்ளார்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வேனின் கண்ணாடியை உடைத்த நபர்களான ஜெயச்சந்திரன், செல்வம் ஆகியோரை அழைத்து பேசினர். பின்னர் அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் கூறினர். ஆனால் எனக்கு பணம் தேவையில்லை. அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
வேனின் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - விசிக ஆர்ப்பாட்டம்