கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தை ஒட்டிய சின்னஞ்சிறு குக்கிராமம் கள்ளுக்கடைமேடு. இக்கிராமத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி வீரமணி. குழந்தை பருவத்தில் போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளான இவர் நடக்கும் திறனை இழந்துள்ளார்.
சிறுவயது முதலே கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், தனது கால்களின் நடக்கும் திறனை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. கடுமையான பயிற்சி, உழைப்பின் காரணமாக கைப்பந்து விளையாடுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.
உள்ளூர் போட்டிகள் மற்றும் மாவட்டம், மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களும் கோப்பைகளும் வென்றுள்ளர். இவரது கிராமத்து இளைஞர்களுக்கும் கைப்பந்து பயிற்சி அளித்து பல வீரர்களை உருவாக்கி வருகிறார். இவரிடம் கைப்பந்து பயிலும் இரண்டு இளைஞர்கள் காவல் துறை பணிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரமணிக்கு திருமணமாகி தீபா என்ற மனைவி, 2 பெண், 2 ஆண் என 4 பிள்ளைகள் இருப்பதால் அருகே உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் பணிக்குச் சென்று வாழ்க்கையை நகர்த்திவருகிறார். இவர் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று இந்தியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான தாய்லாந்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.